ஐரோப்பிய மொழிகள் தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு பன்மொழி ஜாஸ் இசை நிகழ்வு ஒன்று நேற்று (28) மாலை யாழ்ப்பாணம் பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.
கடந்த செப்டம்பர் 26 ஆம் திகதியில் நடைபெற்ற ஐரோப்பிய மொழிகள் தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஐரோப்பிய ஒன்றியம் (EU) சுவிட்ஸர்லாந்து தூதரகம், இத்தாலிய தூதரகம், பிரெஞ்சு தூதரகம் அலையன்ஸ் ஃபிரான்சைஸ், கோதே-இன்ஸ்டிட்யூட் மற்றும் பிரிடிஸ் கவுன்சில் (British council) ஆகியவை இணைந்து இலங்கையின் மூன்று முக்கிய நகரங்களில் பன்மொழி ஜாஸ் இசை சுற்றுப்பயணத்தை நடத்தியிருந்தன அதன் இறுதி நிகழ்வாக யாழ்ப்பாணத்தில் இந்த ஜாஸ் இசை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
சமாதானமிக்க ஒருங்கிணைந்த சமூகமொன்றை நோக்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் விரிவான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடாத்தப்பட்ட இவ் பன்மொழி ஜாஸ் இசை நிகழ்வு பிரதான, பாப் ராக், ஜாஸ் ஃப்யூஷன், ஜாஸ் பாப் மற்றும் லத்தீன் ஜாஸ் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இடம்பெற்றது.
இலங்கை மக்களுடன் மொழியியல் பாரம்பரியத்தின் பன்முகத்தன்மையைப் பகிர்ந்து கொண்டு, கலாச்சாரங்களுக்கு இடையிலான புரிந்துணர்வை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இச் சுற்றுப் பயணம் கொழும்பில் ஆரம்பித்து, கண்டிக்கு பயணித்து பின் நேற்று (28)யாழ்ப்பாணத்தில் நிறைவடைந்தது .
இதன் ஆரம்ப கச்சேரி கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் கடந்த செப்டம்பர் 24 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது . தொடர்ந்து கண்டியில் செப்டம்பர் 26 ஆம் திகதி இடமேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த இசை நிகழ்வில் பாடகர், கிடார் கலைஞர் மற்றும் பாடலாசிரியர் எலியன் அம்ஹெர்ட் மற்றும் Bass இசைக் கலைஞரும், இசையமைப்பாளரும் தயாரிப்பாளருமான அமண்டா ருஸ்ஸா ஆகியோரின் நிகழ்ச்சிகள் ஜெர்மன், பிரஞ்சு, இத்தாலியன், போர்த்துக்கல் மற்றும் ஆங்கில மொழிகளில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் , இலங்கைக்காக சுவிற்சலாந்து துணை தூதுவர் மற்றும் சுவிற்சலாந்து தூதரக அதிகாரிகள் , யாழ் இந்திய துணை தூதுவர் , யாழ் மாநகர மேஜர் மணிவண்ணன் யாழ் மாநகர ஆணையாளர் மற்றும் சிவில் சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் , இளைஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். ஐரோப்பிய மொழிகள் தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு பன்மொழி ஜாஸ் இசை நிகழ்வு
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்